
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியை தனது கெமராவால் தாக்கிய சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் கெமரா கலைஞர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (01) கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நேற்று (30) விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சட்டத்தரணி ஒருவருடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (30) நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை தொடர்பில், அந்த கெமரா கலைஞர் தனது கெமராவால் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரைத் தாக்கும் காட்சி அருகிலிருந்த ஏனைய ஊடகவியலாளர்களின் கெமராக்களில் பதிவாகியிருந்தது.
பின்னர் அச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிஸ் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஆவார்.
அவர் தற்போது நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.