
அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதன் மூலம் மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள், முதியவர்கள் உட்பட முழு நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தருணத்தில் இந்த எரிபொருள் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவதாகவும், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவதாகவும் வாக்குறுதி அளித்ததாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எரிபொருள் துறையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் கொடுப்பனவு முறைகளை நிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் எரிபொருள் மானியம் வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், தற்போது எரிபொருள் விலையை உயர்த்தியதன் மூலம் அந்த மானியம் தொடர்பிலும் கேள்விக்குறி எழுந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மத்திய திறைசேரியில் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டால், பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாதது ஏன் என்றும் எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
மக்களுக்குத் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியில் சவால் விடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் மேலும் தெரிவித்தார்.