
10 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு, மலையக புகையிரத பாதையில் பேராதனை மற்றும் கம்பளை வரையான புகையிரத சேவைகள் நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
'டித்வா' (Ditwah) சூறாவளி காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
'டித்வா' சூறாவளிக்குப் பிறகு பல கட்டங்களின் கீழ் புகையிரத சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அதன்படி, முதலாவதாக அம்பேவெல முதல் பதுளை வரையிலும், கொழும்பு கோட்டை முதல் ரம்புக்கனை வரையிலும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது நானுஓயா முதல் பதுளை வரையிலும், நாவலப்பிட்டி முதல் ஹட்டன் வரையிலும் புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.
நாளை (02) முதல் பேராதனை மற்றும் கம்பளை வரையான புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் அமைந்துள்ள பேராதனை களு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், பேராதனையிலிருந்து கண்டி வரையான புகையிரத சேவை தொடர்ந்து இடம்பெறமாட்டாது.
கடுமையான மழை வீழ்ச்சி காரணமாக பேராதனை களு பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பது சவாலாக அமைந்துள்ளதோடு, அப்பணிகள் நிறைவடைந்த பின்னரே கண்டி மற்றும் மாத்தளை வரையான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
இதனிடையே, கம்பளை - நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் - நானுஓயா இடையிலான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது மலையக புகையிரத பாதையின் சுமார் 75 சதவீதமான பகுதிகளில் புகையிரத சேவைகள் இடம்பெற்று வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கிறது.
இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான சாதாரண புகையிரத கால அட்டவணை ஒக்டோபர் 02 ஆம் திகதி பிற்பகல் முதல் அமுல்படுத்தப்படுவதுடன், நகராந்தர புகையிரதங்கள் உட்பட 8 புகையிரத பயணங்கள் இயக்கப்படவுள்ளன.