
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் இல்லாமல் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
அயர்லாந்துக்கு எதிரான பரபரப்பான வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் நேரடி தகுதியை உறுதி செய்த நிலையில், இந்தப் பட்டியல் முழுமை பெற்றது.
இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் நேரடி தகுதியை இழந்துள்ளதுடன், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடி தங்கள் இடத்தைப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
2027 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் இணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.