
பெந்தோட்டை கடற்பரப்பில் இன்று (29) மாலை இடம்பெற்ற பாராமோட்டார் (Powered Parachute/Paramotor) விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியோரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டார் சவாரியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பாராமோட்டார் கடலில் விழுந்ததில், அதில் பயணித்த 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்துள்ளார்.
எனினும், பாராமோட்டாரை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த விமானி உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.