
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் இரத்த மாதிரியைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விமானி ரஸிகா செவ்வந்தி தாக்கல் தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரத்ன என அறிவிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மரபணு பரிசோதனைக்கான உத்தரவை வழங்குவதற்கு போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்த நீதிமன்றம், குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
எனினும், பிரதான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மனுவில், சாமிக்க கருணாரத்ன தனது குழந்தையின் தந்தை என அறிவிக்குமாறும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை என அவரது பெயரை பதிவு செய்யுமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் ரஸிகா செவ்வந்தி கோரியுள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு முதல் தானும் சாமிக்க கருணாரத்னவும் உறவில் இருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், கர்ப்பம் அடைந்த பின்னர் அவர் தந்தை என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சாமிக்க கருணாரத்ன இதற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், மரபணு பரிசோதனைக்கு உட்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.