
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாக சென்றடையும் நோக்கில், 1990 சுவ செரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ சேவை ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் அல்லது வீதி தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ்கள் தாமதமாகும் பகுதிகளில், அவசர சேவையின் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாகன நெரிசல் காணப்படும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை சென்றடையும் முன், நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் ஆரம்பகட்ட மருத்துவ உதவிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என சுவ செரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த சேவையில் விசேட பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அடிப்படை அவசர மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப்புற பகுதிகளை இலக்காகக் கொண்டு முன்னோடி திட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.