
குடும்பத் தகராறு தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி, பல பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் தடைபட காரணமான நபரொருவருக்கு, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 201,059.90 ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 21 ஆம் திகதி கம்புறுபிட்டிய பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் உயர் மின்னழுத்த மின்பரிமாற்றக் கம்பத்தில் ஏறியதால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியான, தெய்யந்தர, மாவரல, தெனியாய மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டது.
பின்னர் பொலிஸார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர் கீழிறங்க சம்மதித்தார்.
உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு முதலில் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 24 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர் ஜூலை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கு, அந்தத் தொகையை இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.