
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தமது உறுப்பினர்கள் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் முன்மொழிவு மற்றும் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (29) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நேரடியாகவும் இணையவழியாகவும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 3,000 முதல் 4,000 வரையான சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய குறிப்பிட்டார்.
அதில் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு "ஒழுக்கமற்றது" எனக் குறிப்பிட்ட அவர், இது நீண்டகாலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
அரசாங்கம் இந்த முன்மொழிவை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால், அது சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.