
இலங்கையில் பறக்கப்போகும் பயணிகள் ட்ரோன்கள் - 6 மாதங்களில் வர்த்தக சேவை ஆரம்பம்!
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய தயாராகி வருவதாகவும், ஆரம்ப சோதனைகளுக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்குள் வர்த்தக ரீதியான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டத் திட்டத்தின் கீழ், பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் வரையிலான தூரத்திற்கு இயக்கப்படவுள்ளன. அத்துடன், சுற்றுலா தலங்களை நோக்கி செல்லும் இரண்டு விமானப் பாதைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டத்தில், கொழும்பிலிருந்து தென் கடற்கரை பகுதிகளுக்கும், கட்டுநாயக்கவிலிருந்து போர்ட் சிட்டிக்கும் இடையிலான பாதைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இரண்டு பயணிகள் ட்ரோன் விமானங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், முன்னோடித் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் விமானப் பாதைகள் தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், அவசரகால மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள், கடல்சார் மற்றும் கடற்படை தேவைகள் உள்ளிட்டவற்றிலும் இந்த விமானங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று, தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுவது என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகட்ட சோதனைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் வர்த்தக ரீதியான பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.