
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கொலைக்குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான வழக்கினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும் ஒத்திவைத்துள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, சந்திரகாந்தன் நிகழ்நிலை (வீடியோ) ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இந்த வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு கடந்த ஜூன் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு இன்று நிகழ்நிலை ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், சந்திரகாந்தனை எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008 ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனவரி 9 ஆம் திகதி கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மே 22 ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய வழக்குகளுடன் தொடர்புபடுத்தி சந்திரகாந்தன் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.