
பியர் தயாரிப்பில் பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்ப்புகளை தாக்கல் செய்ய ஒக்டோபர் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு நீதியரசர்களான ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம் சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனகேஸ்வரன், சுமதி தர்மவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் எதிர்ப்புகளை தாக்கல் செய்வதற்காக மேலதிக கால அவகாசம் கோரியதையடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது.
உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர்கள், மதுவரி சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி பியர் என்பது மால்ட் மூலம் புளிக்கச் செய்யப்பட்ட மதுபானமாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது பல உற்பத்தியாளர்கள் அரிசி மற்றும் சீனியை பிரதான மூலப்பொருட்களாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை சட்டத்திற்கு முரணானது எனவும், குறிப்பாக அரிசி உற்பத்திக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்களை கருத்தில் கொள்ளும்போது, இது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரிசியை பியர் போன்ற வர்த்தக உற்பத்திகளுக்கு பயன்படுத்துவதால், நாட்டின் அரிசி தன்னிறைவு இலக்கிற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மதுபான உற்பத்தியின் தரத்தை கண்காணிப்பதற்கான தரநிலைகளை இலங்கை தர நிர்ணய நிறுவனம் முறையாக புதுப்பிக்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பியர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை பிரதான மூலப்பொருட்களாக பயன்படுத்த அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.