
மெல்பேர்னில் உள்ள விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு, அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பணியாற்றிய 71 வயதான நாவத்துன்னே விஜிதவுக்கு, நேற்று (8) விக்டோரியா மாநில மாவட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்ததாக அவுஸ்திரேலியாவின் ABC News தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட மிக மோசமான துரோகம் எனத் தெரிவித்த நீதிபதி பர்தீப் திவானா, இலங்கை பௌத்த சமூகத்தில் பிக்குவுக்கு வழங்கப்பட்டிருந்த மதிப்புமிக்க அந்தஸ்தை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டு விஜித குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். சிறுவர்களுடன் பாலியல் ஊடுருவலில் ஈடுபட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுவர்களுடன் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட எட்டு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மெல்பேர்னின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ பகுதிகளில் இயங்கிய குறித்த விகாரையில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
விஜித சிறுமிகளைத் தொடர்ச்சியாகத் தனது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில், சிறுமிகளின் பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்தபோதும் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தமது குடும்பத்தினருடன் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக விகாரைக்குச் சென்றிருந்தனர்.
தண்டனை விதிக்கும் போது கருத்துத் தெரிவித்த நீதிபதி திவானா, விகாரையில் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பிய பெற்றோரின் நம்பிக்கையை பிக்கு தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் பௌத்த மத நடைமுறைகளுடன் தொடர்புடைய மன உளைச்சலைத் தொடர்ந்தும் அனுபவித்து வருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னரே பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு விஜிதவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது விஜித தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, தான் குற்றவாளி அல்ல எனத் தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டதுடன், முறைப்பாட்டாளர்களில் சிலரைத் தன்னால் நினைவுகூர முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
விஜித பிணையில் செல்லத் தகுதி பெறுவதற்கு முன்னர் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆதரவாளர்களைப் பார்த்து விஜித சிரித்துக் கையசைத்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் கோபமடைந்ததாகவும் ABC News தெரிவித்துள்ளது.
விஜித இலங்கையில் பிறந்தவர் என்பதுடன், தனது 15ஆவது வயதில் பௌத்த துறவற வாழ்க்கையில் இணைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் ஸ்வீடனுக்குச் சென்று அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தம்ம சரண விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்றுள்ளார்.
சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர் விஜித நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலத்துக்குப் பின்னர் ஸ்வீடனுக்குத் திரும்புவதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜிதவின் உடல்நிலை தொடர்பிலும் அவரது சட்டத்தரணிகள் முன்னதாகக் கவலை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக, அவருக்கு மறதி நோய் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இத்தண்டனை மூலம் முடிவுக்கு வந்துள்ளன.