
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மனிதகுலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என AI துறையைச் சேர்ந்த முன்னாள் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய Jacob Coxon, அந்த நிறுவனத்திலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளக்கூடிய “Superintelligence” எனப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் போட்டியில் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில், AI திறன்களை அதிகரிப்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதால், அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அதிநவீன AI தொழில்நுட்பங்கள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, AI அமைப்புகள் எதிர்காலத்தில் தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் நிலையை அடைந்தால், அவற்றின் செயல்பாடுகளை மனிதர்களால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும் என்ற கவலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Anthropic நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு AI ஆய்வாளரும், அடுத்த பத்து ஆண்டுகளில் AI காரணமாக மனிதகுலம் முற்றிலும் அழியும் சாத்தியம் குறித்து கவலை தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.