
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோ மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையொன்றில் 16 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பங்கா தேசிய உயர் பாடசாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதிய உணவின் போது, தான் திட்டம் ஒன்றை நிறைவேற்றப் போவதாகக் கூறி நண்பர்களை வீட்டிற்குச் செல்லுமாறு அந்த மாணவன் எச்சரித்துள்ளான்.
எனினும், அவன் வழக்கமாக நகைச்சுவையாகப் பேசுபவன் என்பதால் நண்பர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
மதிய உணவிற்குப் பிறகு, அம்மாணவன் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் அவன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.
காயமடைந்தவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற மூன்றாவது பாடசாலைத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.