
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடற்பகுதியில் உருவாகியுள்ள 'முரசு' சூறாவளி நிலைமை காரணமாக, வட மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கையின்படி, மத்தியமேற்கு வங்கக்கடற்பகுதியில் 'முரசு' சூறாவளி நிலைமை தீவிரமடைந்துள்ளதுடன், அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி கடல் அலைகள் மிகவும் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள சிறிய படகுகள், நிலவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கியோ அல்லது கரைக்கோ திரும்புமாறு பலமாக அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஏனைய பகுதி மீனவர்களும் காற்றின் வேகம் குறித்து அவதானத்துடன் செயற்படுவதுடன், கடலுக்குச் செல்லும்போதும் மற்றும் திரும்பும்போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயம் அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.