
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகன் நாமல் ராஜபக்சவிற்கு, மஹிந்த ராஜபக்ச உணர்வுபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அரசியலுக்கு வரும்போதே தான் வழங்கிய ஆலோசனைகளையும் அவர் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.
2010 இல் நாமல் அரசியலுக்கு வர அனுமதி கேட்டபோது, 'அரசியலுக்கு வந்தால் சிறைவாசத்திற்கும் துன்பங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்' எனத் தான் எச்சரித்ததாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்தச் சிறைவாச காலத்திலும் நீதிமன்றமே தனக்கு நம்பிக்கையாய் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எவர் என்ன கூறினாலும் நீதிமன்றத்தின் மீதுமட்டுமே நம்பிக்கை வைக்குமாறு மகனை வலியுறுத்தியுள்ளார்.
நாமல் பிறந்த அதே நவலோக மருத்துவமனையில் தானும் தனது மனைவியும் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது மற்ற மகன்களான யோஷிதா மற்றும் ரோஹித தங்களை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் எதிரிகள் மீது பழிவாங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், பெற்றோரின் செயல்களுக்குக் குழந்தைகள் பொறுப்பல்ல என்பதும், பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்சக்களின் பாரம்பரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.