
உப்புவெளி, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 02ஆம் திகதி இரவு கப்பல்துறை சந்தியை நோக்கிப் பயணித்த வாடகை முச்சக்கரவண்டியொன்றின் பின்பகுதியில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது கிடைத்த தகவலுக்கு அமைய, விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி கடந்த 06ஆம் திகதி இரவு திக்வெல்ல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் கடந்த 02ஆம் திகதி 32 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தடுப்புக் காவல் உத்தரவு பெற்று அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர்களும் இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட நபர் முன்னர் இராணுவத்தில் சேவையாற்றி சட்டப்பூர்வமாக விலகிய ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.