
எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல்கள் பிற்போடப்படாமல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் இன்று (06) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டு, சர்வாதிகார பொதுக்கணிப்பிற்கு தயாராகி வருவதாக எதிர்க்கட்சியின் சிலர் வெளியிட்ட அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுக்கணிப்பொன்றின் போது மக்களின் கருத்துக்கள் இரண்டு பக்கங்களாகப் பிரியும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் அது மேலும் பல பிரிவுகளாகப் பிரியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிலவும் சட்டத் தடைகள் நீக்கப்பட்டவுடன் உடனடியாக அத்தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
"நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட ஆயத்தமாவதாகவும், பொதுக்கணிப்பொன்றைக் கொண்டுவரப் போவதாகவும் சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் தர்க்க அறிவு சிறிதும் இல்லை. பொதுக்கணிப்பொன்றைக் கொண்டுவந்தால், வாக்குகள் இரண்டாகப் பிரியும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலொன்றைக் கொண்டுவந்தால், அது நான்கு அல்லது ஐந்தாகப் பிரியும். அப்படியிருக்கையில் நாம் ஏன் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர்க்கப்போகிறோம்?
அரசியல் பற்றிய சிறு அறிவு உள்ளவர்களுக்கும் இது தெரியும். தேர்தலைப் பிற்போடுவதற்காக யாரும் பொதுக்கணிப்பைக் கொண்டுவர மாட்டார்கள். தேர்தலை ஒத்திவைக்கக் கோரி பொதுக்கணிப்பு நடத்தப்பட்டால் என்ன நடக்கும்? 'தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்' என்று கூறி இரு முனைகள் உருவாகும். எதிரும் புதிருமாக இருப்பவர்கள் அனைவரும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்ற புள்ளியில் ஒன்றுசேர்வார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தல் வந்தால் அவர்களால் அப்படி ஒன்றிணைய முடியாது ஏனெனில் ஒவ்வொருவரும் கிரீடத்தின் மீதே கண்ணாக இருப்பார்கள்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் உரிய நேரத்தில் நடத்தப்படும். அதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்தார்.