
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்துச் சமய மற்றும் கலாசார அடையாளங்களுக்கும் மதிப்பளிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் நாடொன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவமாக நிமிர்ந்து நிற்கும் 'சமாதானம் மற்றும் மனிதநேயத்தின் நாடாக' இலங்கையைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் இப் பாதையானது, இத் தீபாவளித் திருநாளில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியால் மேலும் பிரகாசிக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
"இருள் நீக்கி ஒளி தரும் இந்து மக்களின் உயரிய சமயத் திருநாளான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
நரகாசூரன் என்ற அசுரனை அழித்ததை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் ஜெயங்கொண்டது போல், அனைவரின் மனங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கும் வாழும் இந்து பக்தர்கள் இந்நாளில் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தம் என்பது வெறுமனே வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பண்புகளின் ஒளியை ஏற்றுவதாகும். எனவே, பிரிவினைக்கு பதிலாக சகவாழ்வையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் நல்ல, நியாயமான மற்றும் பரஸ்பர அனுதாபம் கொண்ட சமூகமொன்றை உருவாக்குவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்ள தீபாவளித் திருநாள் ஒரு அருமையான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.