
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் உடனடியாகப் பணிந்துவிடும் காலம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வழக்கமாக ட்ரம்ப் கோரிக்கைகளை வைப்பார், அதற்கு எதிர்த் தரப்பு சம்மதிக்காவிட்டால் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படும் என எச்சரிப்பார், இறுதியில் மறுதரப்பு அதற்குப் பணிந்துவிடும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த நடைமுறை மாறத் தொடங்கியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கர்னி, ட்ரம்ப்பின் வர்த்தகக் கெடுபிடிகளுக்குப் பணிய மறுத்து நின்றுள்ளார்.
"அமெரிக்கா எங்களை உடைத்துத் தன் வசப்படுத்த முயல்கிறது, அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் தரமாட்டோம்" என மார்க் கர்னி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் கனடா காட்டும் இந்த எதிர்ப்பு, சர்வதேச அளவில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
கனடாவைத் தொடர்ந்து உலகளவில் பல நாடுகளும் ட்ரம்ப்பின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன
ஈரானுக்கு எதிரான ட்ரம்ப்பின் நடவடிக்கைகளில் இணைய ஐரோப்பிய தலைவர்கள் மறுத்துவிட்டனர்.
காசா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக நிராகரித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ட்ரம்ப்பின் திட்டத்தைக் வளைகுடா நாடுகள் கைவிட வைத்தன.
நேட்டோ அமைப்பில் அங்கமாக உள்ள டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தைப் கைப்பற்ற ட்ரம்ப் முயன்றபோது, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன.
இதனைக் கடந்து அமெரிக்காவிலும், ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவுகளுக்கு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
முன்னணி பல்கலைக்கழகங்களும் சட்ட நிறுவனங்களும் அவரது உத்தரவுகளை அப்படியே ஏற்க மறுக்கின்றன.
ட்ரம்ப்பின் நிதிப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமெரிக்க பத்திரச் சந்தை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
பிரபல 'ஏபிசி' (ABC) தொலைக்காட்சி நிறுவனம், தனது ஒளிபரப்பு உரிமத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்திய குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில், ட்ரம்ப் ஆதரவு தெரிவித்த வேட்பாளர்களில் 10 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
இருப்பினும், ட்ரம்ப்பின் செல்வாக்கை அவ்வளவு எளிதாகக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் இந்த விமர்சனங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
தனது சமூக வலைத்தளப் பதிவுகளில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், "அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்துள்ளன, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். எனது ஆதரவு பெற்ற சில வேட்பாளர்களின் தோல்வி என்பது நட்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாய்ப்பே தவிர, எனது செல்வாக்கு குறையவில்லை. அமெரிக்க வரலாற்றிலேயே மக்களின் நம்பிக்கை இப்போதுதான் உச்சத்தில் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கையும் பயன்படுத்தி நிலைமையை மீண்டும் தனக்குச் சாதகமாக மாற்றக்கூடும் என்றாலும், "ட்ரம்ப்பிற்கு பயந்து ஒதுங்குவது இனி வேலை செய்யாது, அவரது அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்பதே சரியான வழி" என்ற எண்ணம் உலகத் தலைவர்களிடையே மேலோங்கத் தொடங்கியுள்ளதை கனடா பிரதமரின் நடத்தை தெளிவுபடுத்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.